பிஹார் அரசியலின் ‘சாணக்கியர்’ என்று அழைக்கப்படும் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிஹார் மாநிலத்தை வழிநடத்தி வந்த அவர், இன்று தனது அமைச்சரவையின் இறுதிக்கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிதிஷ் குமாரின் இரண்டு தசாப்த கால சேவையைப் பாராட்டிப் பேசியதோடு, அவருக்கு நெகிழ்ச்சியான முறையில் பிரியாவிடை அளித்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சையத் அதா ஹஸ்னைனிடம் (Syed Ata Hasnain) வழங்க நிதிஷ் குமார் லோக் பவனுக்கு விரைந்துள்ளார். நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பிஹார் அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 2005 முதல் பிஹாரின் முகமாகத் திகழ்ந்த அவர், பத்து முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது விலகலைத் தொடர்ந்து, பிஹாரின் அடுத்த முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி (Samrat Choudhary) பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிக நீண்ட கால முதலமைச்சர்களில் ஒருவரான நிதிஷ் குமாரின் இந்த விலகல், தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.