ஆந்திர மாநிலம் என்டிஆர் (NTR) மாவட்டத்தில் உள்ள காஞ்சிகசெர்லா மண்டலத்தில், ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சாலை விபத்து நடந்துள்ளது. அமராவதியில் இருந்து ஐதராபாத் நோக்கி தனது பிஎம்டபிள்யூ (BMW) காரில் சென்று கொண்டிருந்த உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி. ஸ்ரீனிவாஸ் ராவ், இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

​டோல்கேட் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஒரு கான்கிரீட் மிக்சர் லாரி (Mixer Tanker), அந்த சொகுசு காரின் மீது அப்படியே கவிழ்ந்தது. இதில் கார் சுக்குநூறாக நசுங்கி அப்பளமாய் மாறியது. லாரியின் பாரம் தாங்காமல் கார் முற்றிலும் தட்டையானதால், வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

​லாரியின் பிரேக் செயலிழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிரேன் மற்றும் ஜேசிபி (JCB) இயந்திரங்களின் உதவியுடன் கார் மற்றும் லாரி அகற்றப்பட்டு அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த கோர விபத்து குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.