இந்தியப் பிரீமியர் லீக் (IPL) மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர்களை ஒப்பிட்டு, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ரிலே ரூசோ தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் பிஎஸ்எல் 11-வது தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிலே ரூசோ, இரு லீக் போட்டிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

“ஒவ்வொரு லீக்கிற்கும் ஒரு சாதக, பாதகங்கள் உள்ளன. ஐபிஎல் என்பது மிக நீண்ட தொடர். ஆனால் பிஎஸ்எல் மிகக் குறுகிய காலத்திற்குள் விறுவிறுப்பாக நடைபெறும் தொடர். இதில் போட்டித்தன்மை (Competition) மிக அதிகமாகவும், தீவிரமாகவும் இருக்கும். பாலிவுட் நட்சத்திரங்களின் பங்களிப்பு இருப்பதால், ஐபிஎல் தொடர் ஒரு கிரிக்கெட் தொடரை விட ஒரு சினிமா தயாரிப்பு போலவே எனக்குத் தோன்றுகிறது.

இதேபோல், கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவும், ஐபிஎல் தொடரில் தனது திறமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளில் ரிலே ரூசோ விளையாடியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட அவர், 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார்.

நடப்பு 2025 மெகா ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயம் செய்திருந்தும், அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 473 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் தற்போது பிஎஸ்எல் 2026 தொடருக்காக குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியால் சுமார் ரூ. 1.66 கோடிக்கு ரூசோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 79 ரன்கள் எடுத்துள்ள அவர், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ராவல்பிண்டி அணிக்கு எதிராக 53 ரன்கள் குவித்தது அவரது சிறந்த ஆட்டமாக உள்ளது.