புனித நகரமான ரிஷிகேஷில் உள்ள சாய் காட் பகுதியில், பெண் ஒருவர் கங்கை நதிக்கரையில் உள்ள மணலில் குழி தோண்டி பிளாஸ்டிக் மற்றும் பூஜை கழிவுகளைப் புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சியரா லிலியன் என்ற வெளிநாட்டுப் பயணி இந்த வீடியோவை எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
அதில், அந்தப் பெண் வழிபாட்டுப் பொருட்களை மணலில் புதைத்துவிட்டுச் செல்வதைக் காட்டி, “புனிதமாக கருதும் ஒரு நதியை இப்படியா மாசுபடுத்துவது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண்ணிடம் சியரா விளக்கம் கேட்க முயன்றும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
A young Indian woman was throwing garbage along the banks of the Ganges River.
A foreign tourist came and tried to stop her, but she didn’t listen.
She polluted a clean place – and yet we talk about becoming a “Vishwaguru.” pic.twitter.com/52UxhbCn0V
— Aditya. (@Adityaverce) April 12, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாலை நேர கங்கா ஆரத்தி வழிபாட்டின் போதும் பக்தர்கள் பிளாஸ்டிக் உறைகளுடன் கூடிய பொருட்களை நதியில் வீசுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “புனிதப் பொருட்களைக் குப்பைத் தொட்டியில் போடக்கூடாது” என்ற நம்பிக்கையினால், பலர் அவற்றை நதியிலோ அல்லது கரையிலோ விட்டுச் செல்வது கங்கை நதியை மிக மோசமாக மாசுபடுத்துவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய பூக்கள் மற்றும் இலைகள் மட்கிப் போனாலும், அவற்றுடன் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை துணிகள் நதியின் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிக்கின்றன. இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பலர், “பக்தி என்பது இயற்கையைப் பாதுகாப்பதிலும் இருக்க வேண்டும்” என்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
