2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேடைக்கு மேடை அதிமுகவை ‘அடிமை கட்சி’ என்று விமர்சிப்பதை கடுமையாகச் சாடினார்.
மேலும் இந்தியாவிலேயே உண்மையான அடிமை கட்சி என்று ஒன்று இருக்கிறது என்றால் அது திமுக தான் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, 1977-க்குப் பிறகு தமிழகத்தில் ஒரு பிராந்திய கட்சி அதிக முறை ஆட்சி அதிகாரம் செலுத்தியுள்ளது என்றால் அது அதிமுக மட்டுமே என்றும், திமுக அவ்வாறு மக்கள் செல்வாக்கைப் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சித்தாந்த ரீதியாக பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே சில வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் நிலவும் தீய சக்தியான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் நலன் கருதி, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அனைவரும் அவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதாகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் தாங்கள் மிகத் தெளிவாக இருப்பதாகவும் அண்ணாமலை தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
