தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்தத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை என்றாலும், திமுக கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது.

இதன்படி வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குள் சுமார் 26 தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்தப் பிரசாரப் பயணத்தில் குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்யவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர சென்னை, கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களின் முக்கியத் தொகுதிகளிலும் கமல்ஹாசன் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு தனது ஆதரவைத் தெரிவிக்க உள்ளார்.