குஜராத் மாநிலம் தாஹோத் அருகே மேம்பாலத்தில் தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், காயமடைந்த டிரைவருக்கு உதவாமல் அங்கிருந்த பொதுமக்கள் தேங்காய்களை போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து குஜராத் நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. தாஹோத் பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் லாரி திரும்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன.
मध्यप्रदेश से गुजरात नारियल से भरी एक ट्रक आ रही थी। दाहोद में ब्रिज पर ट्रक पलट गया, लेकिन मदद करने के बजाय लोग नारियल लूटने पहुंच गए जैसे कोई मुफ्त सेवा मिल रही हो। हादसे में ड्राइवर की किसी को परवाह नही उसके साथ क्या हुआ होगा किस हाल में होगा, बस फ्री का सामान लूटने की होड़ लग… pic.twitter.com/kpX2d7TMT9
— Ilyas (@Ilyas_SK_31) April 11, 2026
விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் உள்ளே சிக்கி காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அங்கு திரண்ட பொதுமக்கள் அவருக்கு உதவ முன்வருவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக்கிடந்த தேங்காய்களை கொள்ளையடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஏதோ இலவசமாகப் பொருட்கள் விநியோகிக்கப்படுவது போல, தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தேங்காய்களை மூட்டைகளிலும், பைகளிலும் எடுத்துச் சென்றனர்.
விபத்தில் சிக்கிய ஒருவரின் உயிர் குறித்து கவலைப்படாமல், இலவசமாகக் கிடைக்கும் பொருளுக்காக மக்கள் காட்டிய ஆர்வம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. “ஒரு விபத்தின் போது கூட மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் இத்தகைய மக்களிடம் இருந்து, வீடுகளுக்கும் கடைகளுக்கும் எந்த மாதிரியான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?” என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூட்டத்தை கலைத்துவிட்டு காயமடைந்த ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
