உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், மூத்த வழக்கறிஞரான ராஜீவ் சிங் (40) இன்று சனிக்கிழமை காலை 7:15 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ராஜீவ் சிங்கை வழிமறித்த இருவர், அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்ப முயன்றனர்.
இந்தத் துயரமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ஒரு நபர் இறங்கி ராஜீவ் சிங்கைச் சுடுவதும், பின்னர் இருவரும் தப்பிக்க முயலும்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாமல் திணறுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
Real-life ‘Mirzapur’ moment: Lawyer shot dead in UP
In Mirzapur, lawyer Rajeev Singh was shot dead during a morning walk.
Attackers tried to flee, but their bike failed to start kicking it repeatedly as locals closed in. One suspect pointed a gun at the crowd before escaping.… pic.twitter.com/zK1IMXiYBE
— The News Drill™ (@thenewsdrill) April 11, 2026
கொலை நடந்த இடத்திற்கு அருகே இருந்தவர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது, கொலையாளிகள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் மக்களால் அவர்களை நெருங்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பைக் ஸ்டார்ட் ஆனதும் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.
ஏற்கனவே தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக ராஜீவ் சிங் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தும், பாதுகாப்பு வழங்கப்படாததே இந்த மரணத்திற்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கிராமப் பஞ்சாயத்து தொடர்பான பழைய பகை இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
