ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 202 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
பொதுவாக விக்கெட் விழுந்தால் ஆக்ரோஷமாக கொண்டாடும் விராட் கோலி, இந்த முறை அந்தச் சிறுவனின் அபாரமான ஆட்டத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் எவ்வித கொண்டாட்டமும் இல்லாமல் அமைதியாக நடந்து சென்றார். விராட் கோலியின் இந்த நிதானமான செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒரு ஜூனியர் வீரருக்கு எதிராக ஆக்ரோஷத்தைக் காட்டாமல் கோலி நடந்து கொண்டது அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதே சமயம், சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர்சிபி போன்ற ஜாம்பவான் அணிகளின் பந்துவீச்சை துவம்சம் செய்து வரும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
