திரைப்பட நடிகர் பொன்னம்பலம் விஜய்க்கு ஆதரவாக மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், தற்போதைய தமிழக அரசை மிகக்கடுமையாகச் சாடினார். “கடந்த முறை யாருக்கு ஓட்டுப் போடணும்னு தெரியாம நாம செஞ்ச தவறாலதான் இன்னைக்குத் தீய சக்தி ஆட்சியில் இருக்கு” என்று குறிப்பிட்ட அவர், மக்களின் சக்திதான் அவர்களைத் தீய சக்தியாக மாற்றியதாகவும், தற்போது அது ‘தீஞ்சு போன சக்தியாக’ மாறிவிட்டதாகவும் கிண்டலடித்தார். மாநிலத்தில் ஊழல், மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், காவல் நிலையங்களில் கூட சாமானிய மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக ஆவேசப்பட்டார்.
இந்தத் தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், மக்கள் தங்கள் அதிகாரத்தை ஒரு நல்ல சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன்னம்பலம் வலியுறுத்தினார். “நம்ம தளபதி விஜய் மாதிரி ஒரு தூய்மையான சக்தி கிட்ட ஆட்சியைக் கொடுத்தாதான் மக்கள் நிம்மதியா வாழ முடியும்” என்று முழங்கிய அவர், கடந்த காலத்தில் செய்த தவறைத் திருத்திக்கொள்ள இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்டார். விஜய்யை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் பிறக்கும் என்றும், மக்கள் அனைவரும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முடியும் என்றும் அவர் தனது பேச்சில் உறுதியாகத் தெரிவித்தார்.
