சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கனிமொழி சோமு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக விமர்சித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் பிரச்சாரங்களில் நாகரிகமற்ற முறையில் பேசி வரும் அவர், இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேர்தல் களத்தில் பெண்கள் குறித்துப் பேசுவதற்கு என்று ஒரு வரைமுறை இருப்பதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கனிமொழி குறித்து அவதூறாகப் பேசி வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், ஒரு முன்னாள் முதலமைச்சர் இவ்வாறு பேசுவது முறையல்ல என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல மனநல மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாகத் விமர்சித்துப் பேசினார்.
