குஜராத் மாநிலம் அகமதாபாத் சந்த்கேடா பகுதியில், இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தற்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. முதலில் ‘ஃபுட் பாய்சனிங்’ காரணமாக சிறுமிகள் இறந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் அதை முற்றிலுமாக மறுத்துள்ளன.
சிறுமிகளின் உடலில் ‘சல்பாஸ்’ எனப்படும் தானியங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உணவு மூலம் உடலில் ஏறியதா அல்லது கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
விசாரணையில், சிறுமிகளின் தந்தை விமல் பிரஜாபதி நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்ததும், அவர் மாடலிங் துறையில் சாதிக்க விரும்பி ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. நிதி நெருக்கடி மற்றும் குடும்பத் தகராறு ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்த இந்த தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் கடும் மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது சிறுமிகளின் பெற்றோர் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமிகளின் தாயின் தந்தை மெடிக்கல் ஷாப் வைத்திருப்பதால், அங்கிருந்து விஷம் பெறப்பட்டதா என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளை க்ரைம் பிராஞ்ச் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மகள்களைக் கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலைக்கு முயன்றார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் இந்த வழக்கு அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
