கடந்த புதன்கிழமை நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், குஜராத் அணி வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘மேட்ச் பிக்சிங்’ வதந்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

குறிப்பாக, 19-வது ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் அடித்த ஷாட் சிக்ஸர் போலத் தெரிந்தும், தேர்டு அம்பயர் அவசரமாக அதை ஃபோர் என்று அறிவித்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்து பவுண்டரி குஷனில் பட்டது போன்ற காட்சிகள் இருந்தும், அம்பயர் சரியாக கவனிக்கவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​அடுத்ததாக, போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில் நடந்த நிகழ்வுகள் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன. வெற்றிக்கு இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு பந்தில் ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் மில்லர் அதைத் தவிர்த்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் ரன்-அவுட் ஆன போதும், அதைச் சரிபார்க்கப் போதுமான கேமரா கோணங்கள் பயன்படுத்தப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், டி20 கிரிக்கெட்டில் இது போன்ற பரபரப்பான சூழலில் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது என்றும், மில்லர் சூப்பர் ஓவரைத் தவிர்க்கவே அப்படி விளையாடினார் என்றும் ஒரு தரப்பு கூறினாலும், சோஷியல் மீடியாவில் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.