உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள பாரிஸ் நகரைச் சேர்ந்த ஜீன் லே போன், கடந்த 1957-ஆம் ஆண்டு ஒரு பயண விற்பனையாளராக அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே தங்கத் திட்டமிட்ட அவர், அங்கிருந்த வசதிகள் பிடித்துப் போனதால் அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். வாலிப வயதில் அந்த அறைக்குள் நுழைந்தவர், சுமார் 67 ஆண்டுகளை அங்கேயே கழித்து ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக மாற்றங்களை அந்த அறையிலிருந்தே கண்ட அவர், ஹோட்டல் ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறிப்போனார் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.
சுமார் ஏழு தசாப்தங்களாக ஒரே அறையில் வசித்ததற்காக அவர் செலுத்திய மொத்த வாடகைத் தொகை மட்டும் சுமார் 21 கோடி ரூபாய் (2.5 மில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்குச் சராசரியாக 100 டாலர்கள் வரை செலவிட்ட இவருக்கு, ஹோட்டல் நிர்வாகம் பலமுறை சிறப்புச் சலுகைகளை வழங்கியுள்ளது. நவீன உலகில் மக்கள் அடிக்கடி இடமாற்றம் செய்து வரும் நிலையில், அமைதியான மற்றும் நிலையான வாழ்க்கைக்காக ஒரு ஹோட்டல் அறையையே தனது உலகமாக மாற்றிக்கொண்ட இவரின் கதை, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
