மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாலியல் வன்கொடுமை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் கட்டாய மதமாற்றம் போன்ற அதிர்ச்சிகரமான குற்றங்கள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய 18 முதல் 25 வயதுடைய இளம்பெண்களைக் குறிவைத்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிய வைப்பது, தொழுகை மற்றும் நோன்பு இருக்க வைப்பது போன்ற செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.
இதில் ஒரு ஆண் ஊழியர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அவரது பெயர் மாற்றப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது. இதுவரை 9 புகார்கள் பதியப்பட்டுள்ள நிலையில், கடந்த 2022-ம் ஆண்டிலிருந்தே சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கொடூரமான செயல்களில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் நிறுவனத்தின் பெண் மேலாளர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் அரங்கேறிய இந்த மத ரீதியான மற்றும் பாலியல் அத்துமீறல்கள் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
