மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் பல வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, “ஒரு கலாச்சாரமே மீண்டும் எழ முடியாதபடி முற்றிலும் அழிக்கப்படும்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே இந்த போர்நிறுத்த நடவடிக்கைகள் வேகம் எடுத்தது உலக நாடுகளிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், அமெரிக்கா இந்த முடிவை இவ்வளவு அவசரமாக எடுத்ததற்குப் பின்னால் ஒரு அதிர்ச்சிகரமான காரணம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் ‘ஸ்லீப்பர் செல்’ அமைப்புகளால் அமெரிக்காவிற்குள் இருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களுக்குப் பெரும் ஆபத்து இருப்பதாக எப்.பி.ஐ கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவிற்கு உள்ளேயே வன்முறை வெடிக்கக்கூடும் என்ற உளவுத்துறை தகவலால், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருதி, போர்நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே டிரம்ப் இந்த அதிரடி முடிவை அறிவித்ததாகக் கூறப்படுகிறது.