அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரம்பரிய வில்வித்தையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசாமில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில், ராகுல் காந்தி அசாமிய பாரம்பரிய ‘காம்சா’ மற்றும் தொப்பியை அணிந்து வில்வித்தையில் ஈடுபட்டார். அவர் எய்த அம்பானது, அவர் எதிர்பார்த்ததை விட அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கியது.
இதனால் ஆச்சரியமடைந்த ராகுல், “ஓ…” என ஆச்சரியக்குறியுடன் வாயைப் பிளந்து, பின் தனது நாக்கைக் கடித்துக் கொண்டு சிரித்த அழகிய தருணம் அங்கிருந்த தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. வாக்காளர்களுடன் எளிமையாக நெருங்கிப் பழக ராகுல் மேற்கொண்ட இந்த முயற்சி, தற்போது இணையத்தில் ‘ஹார்ட்’களைக் குவித்து வருகிறது. அசாம் சட்டப்பேரவையின் 126 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று (ஏப்ரல் 7) மாலை 5 மணி முதல் ‘அமைதி காலம்’ (Silent Period) தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Rahul Gandhi fires an arrow at Assam rally; his reaction goes viral🫣🙊 pic.twitter.com/N8AcvOVKct
— Loveena🕉️ (@loveena_joshi06) April 6, 2026
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126-ன் படி, வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து விதமான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம் என்றாலும், எவ்வித ஒலிபெருக்கிகளோ அல்லது பொது மேடை நிகழ்வுகளோ நடத்தக்கூடாது. விதிமீறல்களில் ஈடுபடும் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அசாம் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இடையே அங்கு கடும் போட்டி நிலவி வரும் சூழலில், ராகுல் காந்தியின் இந்த கலகலப்பான பிரச்சார வீடியோ தேர்தல் களத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
