அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “இன்றிரவு ஈரானின் நாகரிகமே முடிவுக்கு வரும்” என விடுத்த பகீர் அச்சுறுத்தலுக்கு, ஈரான் தனது வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் மிகவும் ஆவேசமாகப் பதிலளித்துள்ளது.

துருக்கியில் உள்ள ஈரானியத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “மாவீரன் அலெக்சாண்டர் இந்நாட்டை எரித்தார், மங்கோலியர்கள் சிதைத்தனர்; வரலாறு எங்களை எத்தனையோ முறை சோதித்துவிட்டது. ஆனால் ஈரான் இப்போதும் நிலைத்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

காலத்தால் அழிக்க முடியாத ஒரு தொன்மையான கலாச்சாரத்தை, ஒரு தனி நபரின் மிரட்டலால் அழித்துவிட முடியாது எனத் தெரிவித்துள்ள ஈரான், டிரம்பின் இந்த ஆக்ரோஷமான சொல்லாடல்கள் தங்களை ஒருபோதும் பணிய வைக்காது என்பதைத் தெள்ளத்தெளிவாக உலகிற்கு உணர்த்தியுள்ளது.

“>

இந்த மோதலின் உச்சக்கட்டமாக, அமெரிக்காவுடனான அனைத்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பின்வழித் தூதரகத் தொடர்புகளை  ஈரான் அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துள்ளது. வெறும் வெற்று வாக்குறுதிகளுக்காகத் தங்களின் இறையாண்மை மிக்க ஹார்முஸ் ஜலசந்தியை ஒருபோதும் திறக்கப்போவதில்லை என்பதில் தெஹ்ரான் பிடிவாதமாக உள்ளது.

தற்காலிக போர் நிறுத்தத்தை விட, போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதோடு, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கு உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. பேச்சுவார்த்தைக்கான கதவுகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதால், டிரம்பின் காலக்கெடு முடிவடைய உள்ள இன்றிரவு மத்திய கிழக்கில் ஒரு மாபெரும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.