அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தனது பிடிவாதத்தைக் குறைக்காத நிலையில், ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்ற யூகங்களுக்கு வெள்ளை மாளிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
“ஈரான் நாகரிகமே இன்றிரவு அழியக்கூடும்” என்று டிரம்ப் பதிவிட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அத்தகைய ஒரு திட்டம் தற்போதைக்கு இல்லை என வெள்ளை மாளிகை நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், “இரவு 8 மணிக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது; அது ஈரான் இதுவரை பார்த்திராத ஒரு தாக்குதலாக இருக்கும்” என ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் மர்மமான எச்சரிக்கை விடுத்துள்ளார். மறுபுறம், அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தை கதவுகளையும் மூடிவிட்டதாக அறிவித்துள்ள ஈரான், தனது அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டதால், இன்று இரவு உலக வரலாற்றின் மிக முக்கியமான ஒரு போர்க்களமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
