அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், ஈரானில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழந்துள்ளன.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களைத் தகர்க்கப்போவதாக டிரம்ப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளதால், அவற்றைப் பாதுகாக்க ஈரானிய மக்கள் தன்னார்வத்துடன் வீதிகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள முக்கிய மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டமான ‘மனிதச் சங்கிலி’ அமைத்துப் போராடி வருகின்றனர்.

“பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது சர்வதேச சட்டப்படி போர்க்குற்றம்” என முழக்கமிடும் ஈரானியர்கள், தங்கள் நாட்டின் எதிர்கால ஒளியைப் பாதுகாக்கத் தங்களது உயிரையும் பணையம் வைத்து மின் நிலையங்களுக்கு வெளியே அரணாக நின்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

“>

மறுபுறம், அமெரிக்காவுடனான அனைத்து இராஜதந்திர மற்றும் மறைமுகப் பேச்சுவார்த்தை வழிகளையும் ஈரான் முற்றிலுமாகத் துண்டித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீடித்து வரும் இந்தப் போரில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஹ்வாஸில் உள்ள புகழ்பெற்ற வெள்ளைப் பாலம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருவதால், ஈரானிய நகரங்கள் போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன. டிரம்பின் எச்சரிக்கை விடுத்த காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைவதால், அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்துமா அல்லது மக்களின் இந்த உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் போரின் போக்கை மாற்றுமா என்ற திக் திக் நிமிடங்கள் தொடர்கின்றன.