ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார் நாடு தற்போது ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இருக்கும் ‘ராஜதந்திர ஜன்னல்’ (Diplomatic Window) மிக வேகமாக மூடிக்கொண்டிருக்கிறது” என்று கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

அதாவது, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இருக்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போவதாகவும், நிலைமை கையை மீறிச் சென்றால் ஒட்டுமொத்த பிராந்தியமும் ஒரு மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும் என்றும் கத்தார் எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய 8 மணி நேரக் கெடு முடிவடையும் நிலையில், கத்தார் விடுத்துள்ள இந்தத் ‘திக் திக்’ அறிவிப்பு உலக நாடுகளைப் பதற்றமடையச் செய்துள்ளது.

சாமான்ய மக்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரும் அமைதியை விரும்பினாலும், போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் அடுத்த சில மணி நேரங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன.