பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது மைதானத்தில் ஒரு கோரமான விபத்து நடந்துள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்சா சஜ்ஜாத், பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பேட்டர் அடித்த பந்து எதிர்பாராத விதமாக அவரது மண்டையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கியது.

பந்து பட்ட வேகத்தில் நிலைதடுமாறி மைதானத்திலேயே மயங்கி விழுந்த அந்த வீரர், சில நிமிடங்கள் சுயநினைவின்றி இருந்ததால் சக வீரர்களும் பயிற்சியாளர்களும் மிகுந்த அச்சமடைந்தனர்.

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், அந்தப் பயிற்சி அமர்வு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

தற்போது அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் ஸ்கேன் ரிப்போர்ட்டுக்குப் பிறகே மேலதிக விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.