ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளதால், இறக்குமதிச் செலவைக் குறைக்க பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார்.
இந்த அதிரடி உத்தரவின்படி, பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கே மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் எரிபொருள் விநியோகம் முடங்கியுள்ள சூழலில், பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள இந்தத் தீவிர நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
