மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை சிறுவர்களைப் போர்க்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்காக விதித்துள்ள காலக்கெடு முடிவடைய சில மணி நேரங்களே உள்ள நிலையில், ஈரானியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டுத் தளபதி ஹொசைன் எக்தா அரசுத் தொலைக்காட்சியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுவர்கள் நிஜமான வீரர்களாக மாற வேண்டும் என்றால் அவர்களைப் போர்க்களத்தின் மையப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பதினொரு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் பசிஜ் தன்னார்வப் படை மூலம் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மசூதிகள் மற்றும் பொது இடங்கள் வழியாக ராணுவப் பணியில் சேர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் பாதுகாப்புச் சாவடிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், சிறுவர்களை முன்னிலைப் படுத்துவது அவர்களைப் பெரும் உயிரிழப்பு அபாயத்திற்குத் தள்ளும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
15 வயதிற்குட்பட்ட சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பது ஒரு போர்க்குற்றம் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஈரானின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு தனது நாட்டின் ராணுவத் தளங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைப் பாதுகாக்கச் சிறுவர்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை வீச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அனுபவமற்ற சிறுவர்களைப் பணியில் அமர்த்துவது ஈரானின் ராணுவ பலவீனம் அடைந்துள்ளதைக் காட்டுவதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள காலக்கெடுவிற்குப் பிறகு தாக்குதல்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளதால், ஈரானியச் சிறுவர்களின் எதிர்காலம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரான் தனது பிடிவாதமான போக்கைத் தொடர்ந்து வருவது அந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்புவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
