உலகின் முன்னணி சமூக வலைதளச் செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் வசதிக்காகத் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது சுயவிவரப் புகைப்படம் (Profile Picture – DP) தொடர்பாக ஒரு முக்கிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, ஒரு பயனர் தனது கணக்கில் சுயவிவரப் புகைப்படம் (DP) வைக்கவில்லை என்றால், அவரது பெயரின் முதல் எழுத்து மற்றும் ஏதேனும் ஒரு நிறம் மட்டுமே அந்த இடத்தில் தோன்றும். ஒரே பெயரில் பல தொடர்புகள் இருக்கும்போது, யார் யார் என்று அடையாளம் காண்பதில் பயனர்களுக்குப் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளது. இதன்படி உங்கள் மொபைல் போனில் ஒருவரின் எண்ணைச் சேமிக்கும்போது, அந்தத் தொடர்புக்கு (Contact) நீங்கள் ஏதேனும் புகைப்படம் வைத்திருந்தால், அதே புகைப்படம் இனி வாட்ஸ்அப் ‘டிபி’ பகுதியிலும் பிரதிபலிக்கும். அவர்கள் வாட்ஸ்அப்பில் படம் வைக்காத பட்சத்தில், நீங்கள் போனில் வைத்திருக்கும் படமே அங்கு தெரியும் என்பதால் பயனர்களை அடையாளம் காண்பது எளிதாகும்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ‘வா பீட்டா இன்போ’ (WABetaInfo), இந்த புதிய வசதி பயனர்களின் தனியுரிமையை (Privacy) எந்த வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனை முறையில் உள்ளதாகவும், விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
