தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதிலிருந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகக் கரூர் சம்பவத்திற்குப் பிறகு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடரப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் அமீர் விஜய் குறித்துக் கூறியதாகச் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்ற அடிப்படையில் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாகவும் ஆனால் அவரது செயல்பாடுகள் சரியாக இருந்தால் மட்டுமே ஆதரிப்பேன் என்றும் அமீர் ஏற்கனவே தெரிவித்து வந்தார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டிருந்த போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது சீமான் போன்ற மாற்று சக்திகள் வளர்ந்து வரும் சூழலில் ரஜினியின் வருகை அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தான் கூறியதாக அமீர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான சில செய்திகளில் அன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவரை எதிர்த்ததாகவும் பின்னர் அவர் தன்னைத் திருத்திக் கொண்டு அரசியலிலிருந்து விலகி மீண்டும் நடிக்கச் சென்றது போல விஜய்யும் அரசியலைப் பற்றி எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பித்து இருப்பதாகவும் அவர் தனது கட்சியைக் கலைத்துவிட்டுச் சென்றால் அவருக்கு நல்லது என்றும் அமீர் கூறியதாகத் தகவல்கள் பரவின.

இந்தச் செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்த நிலையில் இதற்கு இயக்குநர் அமீர் தற்போது அதிரடி விளக்கம் அளித்துள்ளார். தான் அவ்வாறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் ஊடகங்களில் வெளியானது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துத் தான் விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர் கட்சியைக் கலைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று தான் கூறவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் விஜய் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு இயக்குநர் அமீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.