தலைநகர் டெல்லியில் வெறும் 400 ரூபாய் கடனுக்காக 26 வயது இளைஞர் ஒருவரை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூரத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த முகமது கைஃப் (26) என்பவர், சாலையில் ஒரு கடையின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள், கைஃப்பை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்திகளால் கைஃப்பை சரமாரியாகக் குத்திவிட்டு அந்தச் சிறுவர்கள் தப்பியோடினர்.
இந்தக் கொடூரத் தாக்குதலை அந்தச் சிறுவர்கள் தங்களது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர், சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் வசனத்தை ‘கேப்ஷனாக’ போட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைஃப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆஷிஷ் மிஸ்ரா கூறுகையில், “வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையிலிருந்து வந்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், உயிரிழந்த கைஃப் அந்தச் சிறுவர்களிடம் ரூ.400 கடன் வாங்கியிருந்ததும், அதைத் திருப்பித் தராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதும் தெரியவந்தது” என்றார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கத்திகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த 16 வயதுடைய அந்த மூன்று சிறுவர்களையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வன்முறைப் போக்கும், குற்றங்களைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுப் பிரபலமடையத் துடிக்கும் மனநிலையும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
