பீகார் மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு மாமனார் கொடுத்த பணத்தைச் சூதாட்டத்தில் இழந்த கணவன், அதைத் தட்டிக்கேட்ட 9 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சவுத்ரி. இவருடைய மனைவி லட்சுமி குமாரி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், லட்சுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
நாடு முழுவதும் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 நாட்களாக இவர்களது வீட்டில் சிலிண்டர் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், லட்சுமி விறகு அடுப்பில் சமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால் புகை மற்றும் வெப்பம் காரணமாக அவர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மகளின் சிரமத்தைக் கண்ட லட்சுமியின் தந்தை, சிலிண்டர் வாங்குவதற்காக மருமகன் ராஜ் சவுத்ரியிடம் ரூ. 1,000 கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பணத்தை ராஜ் சவுத்ரி சூதாட்டத்தில் இழந்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு இது தொடர்பாக தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜ் சவுத்ரி தனது கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் லட்சுமியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். செங்கலால் தலையில் அடித்ததில் லட்சுமி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
மனைவி உயிரிழந்ததை உணர்ந்த ராஜ் சவுத்ரி, தனது மாமியார் வீட்டாருக்கு போன் செய்து, லட்சுமி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு லட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மருத்துவமனையிலேயே இரு தரப்பு உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லட்சுமியின் சகோதரி கூறுகையில், “அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், விபத்து போலச் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் காரிலேயே ஊர் சுற்றியுள்ளார்” என்று குற்றம் சாட்டினார். ஆனால், தான் வீட்டிற்கு வந்தபோது மின்சாரம் இல்லை என்றும், இருட்டில் லட்சுமி கீழே விழுந்து கிடந்ததாகவும் ராஜ் சவுத்ரி மறுப்பு தெரிவித்து வருகிறார்.
தகவலறிந்து வந்த போலீஸார் ராஜ் சவுத்ரியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே லட்சுமி எப்படி இறந்தார் என்பது குறித்த முழு உண்மையும் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் தாயும், பிறக்காத குழந்தையும் உயிரிழந்த இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
