இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கையில் ரொக்கப் பணம் இல்லாமலேயே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்யும் வசதி கிடைத்துள்ள அதே வேளையில், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1-ஆம் தேதி முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

இனி அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இரண்டு நிலை உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, வெறும் ஓடிபி மட்டுமின்றி, கூடுதலாக பின் நம்பர் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் சோதனைகள் மூலமே பணத்தை அனுப்ப முடியும். இந்த புதிய விதிகளின்படி, பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் அல்லது புதிய செல்போன்களில் இருந்து செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் இருக்கும்.

ஒரு நாளில் அதிகபட்சமாக 50 முறை மட்டுமே வங்கி இருப்பைச் சரிபார்க்க முடியும். மேலும், கடன் தவணை மற்றும் சந்தா கட்டணங்கள் போன்ற தானியங்கி பணப்பரிவர்த்தனைகள் இனி இரவு 9.30 மணி முதல் காலை 10 மணிக்குள் முடிக்கப்படும்.

ஒருவேளை பாதுகாப்பு குறைபாடுகளால் பண இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகளே பயனர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், இனி பொதுமக்கள் அதிக பாதுகாப்புடன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.