75 வயதிலும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறைக்கு அப்பாற்பட்டு பலருக்கும் ரகசியமாக உதவி செய்வதில் பெயர் பெற்றவர். சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் லிவிங்ஸ்டன் தனது குடும்பத்திற்கு ரஜினி செய்த மிகப்பெரிய உதவியை உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டார். லிவிங்ஸ்டனின் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் அறுவை சிகிச்சைக்கு ஒரு பெரிய தொகை தேவைப்பட்ட சூழலில், கடுமையான பண நெருக்கடியில் இருந்த லிவிங்ஸ்டன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். இந்த விஷயம் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்தின் காதுகளுக்கு உதவி இயக்குநர்கள் மூலம் எதேச்சையாகச் சென்றடைந்தது.

இதனால் நிலைமையை அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக லிவிங்ஸ்டனை நேரில் அழைத்து, எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ரூ. 15 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார். அந்தத் தொகையை வாங்க லிவிங்ஸ்டன் தயங்கியபோது, “நான் உன் அண்ணன் மாதிரி, அண்ணன் கொடுத்தால் வாங்க மாட்டாயா?” என்று கூறி அன்புடன் வற்புறுத்தி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் செய்த இந்தச் சரியான நேரத்து உதவியால்தான் தனது மனைவி இன்று உயிருடன் இருப்பதாக லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் ரஜினிகாந்தின் மனிதாபிமானத்தையும், விளம்பரமில்லாத அவரது உதவும் குணத்தையும் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.