கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறிய காட்சியைப் போலவே, தற்போது சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டால் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பெரு நகரங்களில் சமையல் எரிவாயுவின் விலை விண்ணைத் தொட்டுள்ளதுடன், போதிய தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
எரிவாயு விநியோகம் சீராக இல்லாததால், இந்தியாவில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் தங்களது செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, அங்கு பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் உணவுப் பாதுகாப்பு இல்லாததால் பெருமளவில் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
ये Video बिहार में पटना के दानापुर रेलवे स्टेशन को है। कई प्रवासी मजदूर अपने घरों को लौट रहे हैं। इनका कहना है कि गैस नहीं मिल रही, होटलों में महंगा भोजन खाना मुश्किल है। इसलिए वे घर लौटने को मजबूर हैं।
— Sachin Gupta (@Sachingupta) April 4, 2026
பாட்னாவில் உள்ள தானாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த தொழிலாளர்கள் தங்களது வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் கூறியதாவது, “கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. கிடைத்தாலும் அதில் குறைந்த அளவே எரிவாயு இருக்கிறது. ஹோட்டல்களில் உணவுகளின் விலை ஏறிவிட்டதால், எங்களால் வெளியே வாங்கிச் சாப்பிட முடிவதில்லை. சமைக்க எரிவாயு இல்லை, வேலை செய்ய இடமில்லை, பிறகு எப்படி நகரத்தில் பிழைப்பது? அதனால்தான் வேறு வழியின்றி கிராமங்களுக்குத் திரும்புகிறோம் என்றனர்.
சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் மீண்டும் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். “வேலை இருந்தாலும், சமைப்பதற்கு வசதி இல்லாமல் எப்படி உயிர் வாழ்வது? அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டது” என்று தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி தங்களை அகதிகளாக மாற்றி வருவதாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
