மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில், பெண்களின் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நடமாடும் ‘பிங்க்’ (Pink Toilet) கழிப்பறை ஒன்றில் சட்டவிரோதமாக சிற்றுண்டிச்சாலை (Cafe) நடத்தப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

மும்பை மாநகராட்சி சார்பில் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகளை வழங்க ‘மகிளாசாதி ஸ்வச்சதாகிருஹா’ என்ற திட்டத்தின் கீழ் இளஞ்சிவப்பு நிற பேருந்து கழிப்பறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தெற்கு மும்பையின் ஃபேஷன் ஸ்ட்ரீட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இத்தகைய ஒரு பேருந்தின் பின் பகுதியில், கடந்த ஓராண்டாக ரகசியமாக உணவகம் ஒன்று செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சுகாதாரமான கழிப்பறை வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உணவு சமைத்து பரிமாறப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த சிற்றுண்டிச்சாலையின் மேலாளர் கீதா மெகர் கூறுகையில், உள்ளூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மகரந்த் நர்வேகர் அனுமதியுடனேயே தாம் இதை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், “நான் மாமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் பணிபுரிகிறேன், அவரே என்னை இங்கு நியமித்தார்” என்றும் அவர் கூறினார். ஆனால், இதற்கான முறையான உரிமங்களோ அல்லது ஆவணங்களோ அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ராகுல் நர்வேகரின் கடிதம் ஒன்று வெளியான போதிலும், அதில் வணிக ரீதியான அனுமதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ராகுல் நர்வேகர், “விண்ணப்பதாரர் என்ற முறையில் அவரது பெயரை பரிசீலிக்கும்படி மட்டுமே நான் பரிந்துரை செய்தேன். அதற்காக முறையான உரிமம் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட அனுமதித்ததாகப் பொருள் கொள்ள முடியாது. சட்டத்திற்குப் புறம்பான எதையும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, மும்பை மாநகராட்சியின் ‘A’ வார்டு அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர். முறையான அனுமதி இன்றி இயங்கி வந்த அந்தச் சிற்றுண்டிச்சாலையை மூடிய அதிகாரிகள், அங்கிருந்த சமையல் உபகரணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் பெண்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை வணிக நோக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.