கடந்த 2013-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அபோஹர் பகுதியில் பணியாற்றி வந்த ராணுவ கேப்டன் சந்தீப் தோமர், தனது மனைவி ஸ்வேதா சிங்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இது தற்கொலை என்று அவர் நாடகமாடிய போதிலும், போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 2014-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ராணுவத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த அவர், 2019-ல் ஜாமீனில் வெளிவந்தார். 2022-ல் அவரது மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் மீண்டும் சரணடையாமல் தலைமறைவானார். முகம் மற்றும் அடையாளத்தை முழுமையாக மாற்றிக்கொண்ட அவர், ஒடிசா, பெங்களூரு என இடங்களை மாற்றி இறுதியில் மத்திய பிரதேசத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணமும் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
அவரைப் பிடிக்க பஞ்சாப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர் தனது சம்பளக் கணக்கை துவங்கியபோது அசல் ‘பான்’ (PAN) கார்டைப் பயன்படுத்தியதை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த வங்கிக் கணக்கின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, பாரத் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அந்த முகவரியை வைத்து மத்திய பிரதேசத்தின் பாந்துர்ணா மாவட்டத்தில் பதுங்கியிருந்த சந்தீப்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒரு சிறிய கவனக்குறைவு 4 ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
