பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் இளைய மகன் காசிம் கான், ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் தனது தந்தையின் நிலை குறித்து ஆற்றிய உரை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஜிபிஎஸ் பிளஸ்’ வர்த்தக சலுகை அந்தஸ்தை பறிக்க காசிம் முயற்சிப்பதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 61-வது கூட்டத்தொடரில் பங்கேற்ற காசிம் கான், சிறையில் வாடும் தனது தந்தை இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்தார். 2023 ஆகஸ்ட் முதல் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தையை உடனடியாக விடுவிக்க சர்வதேச சமூகம் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“அரசியலில் ராணுவத்தின் தலையீட்டை எதிர்த்ததற்காகவே எனது தந்தை பழிவாங்கப்படுகிறார். பல மாதங்களாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக அவரிடம் பேசிய தொலைபேசி அழைப்பும் பாதியிலேயே துண்டிக்கப்பட்டது” என காசிம் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இம்ரான் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் ஆகியோரின் இளைய மகன் காசிம் கான் (26). லண்டனில் வளர்ந்த இவர், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வரலாற்றில் பட்டம் பெற்றவர். 2023-இல் ‘Mifu’ என்ற பெயரில் ஒரு விளம்பரச் செயலியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த காசிம், தனது தந்தையின் கைதிற்குப் பிறகே பொதுவெளிக்கு வந்துள்ளார்.
காசிம் கானின் இந்த உரைக்கு ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசியதன் மூலம், அந்நாட்டு ஏற்றுமதிக்குக் கிடைத்து வரும் ‘ஜிபிஎஸ் பிளஸ்’ வரிச்சலுகையை ரத்து செய்ய காசிம் முயற்சிப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அரசியலில் ஈடுபாடு இல்லாத ஒரு இளைஞர், சர்வதேச மேடையில் தனது தந்தையின் விடுதலைக்காகப் பேசியது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
