அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள பிரபல ‘ஹோல் ஃபுட்ஸ்’ வணிக வளாகத்தில், பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 23-ஆம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள அந்த வணிக வளாகத்தில் ஒரு பெண் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அப்பெண்ணின் முன்னிலையில் அநாகரீகமாக நடந்துகொண்டதோடு, அவருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர் தனது கையில் செல்போன் ஒன்றை வைத்திருந்ததாகவும், இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்தவுடன் அந்தப் பெண் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபரின் முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க, தாடி வைத்திருக்கும் அந்த நபர், டெனிம் சட்டை மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருப்பது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது இடத்தில் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டறிய பொதுமக்கள் உதவுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். வணிக வளாக நிர்வாகமும் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.