பெங்களூரு அருகே உள்ள பைரப்பனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் தனது மனைவியின் தம்பியான ரஞ்சித் என்பவரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநிவாஸின் தங்கையுடன் ரஞ்சித்திற்குத் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீநிவாஸின் தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில் இந்த உறவைக் கைவிடுமாறு ரஞ்சித்தை அவர் பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும் ரஞ்சித் தனது போக்கை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் இந்த விவகாரம் குறித்துப் பேச வேண்டும் எனக் கூறி ரஞ்சித்தை ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
ரஞ்சித் அங்கு வந்தவுடன் ஸ்ரீநிவாஸ் தான் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரைத் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ரஞ்சித்தின் உடலைத் தனது காரிலேயே ஏற்றிக்கொண்டு ஸ்ரீநிவாஸ் நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் சரணடைந்தார்.
உயிரிழந்த ரஞ்சித்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் ஸ்ரீநிவாஸைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பகை மற்றும் கள்ள உறவு காரணமாக நடந்த இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
