உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாஹர் பகுதியில், 12 வயது சிறுமி தனது தந்தை கையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ராணி என்ற ஆறாம் வகுப்பு மாணவி, மளிகைக் கடையில் மிட்டாய் பாக்ஸ் ஒன்றை திருடியதாகக் கூறி, அவரது தந்தை புஷ்பேந்திர குமார் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி, துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

​இந்தச் சம்பவத்தின் போது, மகளைக் காப்பாற்ற வந்த தாயையும் அந்த நபர் தாக்கியதோடு, குடும்பத்தினர் அனைவரையும் அறையில் பூட்டி வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டுத் தப்பி ஓடிய அந்தப் பாதகன், விடியற்காலையில் தாய் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு சிறிய மிட்டாய் திருட்டுக்காகச் சொந்த மகளையே அடித்துக் கொன்ற தந்தையின் இந்தச் செயல், சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பெற்றோர்களின் பொறுப்பற்ற கோபம், ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துள்ளது” என உள்ளூர் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.