இந்தியா மற்றும் சீனாவின் அசாத்திய வளர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் கடின உழைப்பால் வந்ததே தவிர, மற்றவர்களின் தயவால் இல்லை என்று இந்தியாவிற்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார். சீனாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியது ஒரு தவறு என்றும், அந்தத் தவறை இந்தியா விஷயத்தில் செய்ய மாட்டோம் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றம், அந்த நாட்டு மக்களின் அறிவையும் உழைப்பையும் சார்ந்தது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டுமே உலகின் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் என்பதால், இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாக ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீன தூதர் பேசிய இந்த கருத்துக்கள் சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
