சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார், தமிழக கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உயர்கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவங்கள் நடப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது எனச் சாடியுள்ளார்.

“கல்வி கற்க வரும் மாணவிகளுக்குப் பேராசிரியர்களே தொல்லை கொடுப்பது வேலியே பயிரை மேய்வதைப் போன்றது” என அவர் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தை நோக்கிச் சில முக்கியமான கேள்விகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய ‘பாலியல் தொல்லை தடுப்புக் குழு’ (Internal Complaints Committee) செயல்பாட்டில் இருக்கிறதா? அல்லது பெயரளவுக்கு மட்டும் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது எகிறியுள்ளது.