போலீஸ் ஸ்டேஷன் என்றாலே பயம் இருக்கும், ஆனால் இந்தச் சம்பவத்தைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்! பிதர்வார் பகுதியில் டிராஃபிக் சோதனையின் போது பிடிபட்ட ஒரு தம்பதி, பைன் கட்டாமல் தப்பிக்கப் போட்ட அந்த ‘பிளான்’ எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது. போலீஸிடம் சிக்கிய அந்தப் பெண், திடீரென தான் ஏதோ தெய்வீக நிலையில் இருப்பதாகக் கூறி, ஸ்டேஷனுக்குள் ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கினார். தலையைச் சுழற்றி, கைகளை வீசி, தான் ஒரு தெய்வம் தன் மீது ஏறியிருப்பதாக அவர் நடத்திய அந்த ‘நாடகம்’, அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளையே சில நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது.

​எதற்கும் அசராத அந்தப் பெண் சுமார் இரண்டு நிமிடங்கள் ஸ்டேஷனை ஒரு கலக்கு கலக்கிவிட, நிலைமை கையை மீறிப் போவதை உணர்ந்த ஒரு கான்ஸ்டபிள், வேறு வழியின்றித் தன் பாக்கெட்டில் இருந்த 50 ரூபாயை எடுத்து அவர் கையில் திணித்து அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர்களின் பைக் சாவியும் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக தப்ரா பகுதியிலும் இதேபோல் ஒருவர் சாமியாடி பைன் கட்டாமல் எஸ்கேப் ஆன சம்பவம் நினைவிருக்கலாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “டிராஃபிக் பைன் கட்டாம இருக்க இது புது ரக ஸ்கெட்சா?” என நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.