பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என டெல்லி தலைமைக்குக் கடிதம் எழுதியதாகப் பரவி வரும் தகவல் குறித்து, சென்னை செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது” என்று மேலோட்டமாகத் தெரிவித்தாலும், அண்ணாமலை நிச்சயமாகத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
மேலும், தமிழகச் சட்டமன்றத்திற்குள் அண்ணாமலை ஒரு மக்கள் பிரதிநிதியாகக் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் போட்டி குறித்த சலசலப்புகள் பாஜவினரிடையே எழுந்துள்ள நிலையில், வானதி சீனிவாசனின் இந்தப் பதில் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
