ஈரானுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் வானில் பல்லாயிரக்கணக்கான காகங்கள் திடீரெனத் திரண்டு வட்டமிட்ட விசித்திரக் காட்சி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தலைநகரின் புகழ்பெற்ற அஸ்ரிலி கோபுரங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களைச் சுற்றி, கருமேகங்கள் படர்வதைப் போல பல்லாயிரக்கணக்கான காகங்கள் ஒன்றாகக் கூடிப் பறந்தன. இந்தத் திகிலூட்டும் காட்சியை உள்ளூர் மக்கள் தங்களது செல்போன்களில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

இந்த மர்ம நிகழ்வை பலரும் மத ரீதியான அழிவுக்கான அறிகுறியாகக் கருதுகின்றனர். குறிப்பாக, பைபிளில் உள்ள ‘வெளிப்படுத்துதல்’ (Book of Revelation 19:17) அதிகாரத்தைச் சுட்டிக்காட்டி, இது ஒரு பெரும் பேரழிவு அல்லது போரின் முன்னறிவிப்பு எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரானுடனான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது ஏதோ ஒரு விபரீதத்தின் அறிகுறி எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

இருப்பினும், பறவையியல் வல்லுநர்கள் இந்தக் கருத்தை மறுத்துள்ளனர். இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று கூறும் அவர்கள், பின்வரும் விளக்கங்களை முன்வைக்கின்றனர். அதாவது இஸ்ரேல் நாடு, உலகின் முக்கியமான பறவைகள் இடப்பெயர்ச்சிப் பாதையான ‘கிரேட் ரிஃப்ட் வேலி’ (Great Rift Valley Flyway) பகுதியில் அமைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், சுமார் 50 கோடி பறவைகள் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவை நோக்கி இஸ்ரேல் வழியாகப் பயணம் செய்கின்றன. காகங்கள், கொக்குகள் மற்றும் பெலிகன் பறவைகள் கூட்டமாகச் செல்வது இந்தப் பருவத்தில் சாதாரணமானது. ஆனால், தற்போது நிலவும் போர்ச் சூழலால் இது மிகைப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படுகிறது.

மேலும் இயற்கை நிகழ்வா அல்லது ஏதேனும் மறைமுக எச்சரிக்கையா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், டெல் அவிவ் நகர மக்கள் இந்த அசாதாரணக் காட்சியால் பெரும் திகைப்பிலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர்.