ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தீவிர ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஈரான் அரசு ஆகிய இருதரப்புடனும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசி வாயிலாகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் மிக சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் ஆசிம் முனீர், டெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு தரப்பிடமும் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், இந்த மத்தியஸ்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்காவின் 15 அம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் ஈரானிடம் சமர்ப்பித்த போதிலும், ஈரான் அதனை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்தியஸ்தம் செய்வதில் பாகிஸ்தானுக்கு நீண்ட கால வரலாறு உண்டு. அதன்படி
-
அமெரிக்கா – சீனா (1970): 1970-களில் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் சீனத் தலைவர் மாவோ சேதுங் இடையே உறவைச் சீராக்க பாகிஸ்தான் பாலமாகச் செயல்பட்டது.
-
ஈரான் – சவுதி அரேபியா (2019): 2019-இல் அப்போதைய பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நிலவிய ராணுவப் பதற்றத்தைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார்.
-
ஆப்கானிஸ்தான் விவகாரம்: தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் உதவியது.
பாகிஸ்தானின் இந்த முயற்சிக்குச் சில சவால்களும் உள்ளன. பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்குச் சவுதி அரேபியா முதுகெலும்பாக உள்ளது. சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளதால், ஈரான் – சவுதி உறவில் விரிசல் ஏற்பட்டால் பாகிஸ்தான் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படலாம். இது குறித்து பிரதமர் செபாஸ் ஷெரீப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மறுபுறம், இந்தியா இந்தப் போர்ச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பக்கம் சாய்ந்திருந்த இந்தியா, தற்போது தனது நிலைப்பாட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்தியப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரான் தரப்புடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். மேலும் மேற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு ராஜதந்திர வழிகளில் முயன்று வருகின்றன. இதில் யாருடைய முயற்சி வெற்றி பெறும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
