பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹிருதய நந்த் சவுபே (84), அவரது மனைவி ஷைலா தேவி (76) மற்றும் அனில் சவுபே (40) ஆகியோர் சரயு விரைவு ரெயிலில் பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு பயணம் செய்தனர். அப்போது அவர்களுடன் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள், மயக்க மருந்து கலந்த பிஸ்கட்களை கொடுத்து அவர்களை மயக்கமடையச் செய்துள்ளனர்.
ரெயில் சுல்தான்பூர் நிலையத்தை வந்தடைந்தபோது, மூவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்ட சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.மீட்கப்பட்ட மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதியவர் நந்த் சவுபேவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவு திரும்பிய பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெயில்வே போலீசார், பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
