புதுச்சேரி அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 15ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் முப்பது தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் நான்காம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பதினாறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பதினான்கு தொகுதிகளில் உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டும் அதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வரும் தேர்தலில் போட்டியிடத் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த புதுச்சேரி மாநில அதிமுக துணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டனின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து விலகியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த விலகல் படலம் அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
