அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உலகப்போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், “ஈரான் பிடிவாதத்தைக் கைவிட்டு ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும். தவறினால், அந்நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படும். மிகப்பெரிய மின் நிலையத்திலிருந்து எங்கள் தாக்குதல் தொடங்கும்” என அதிரடி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவ ஊடகம், “ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும் இருளில் மூழ்கும்” என எச்சரித்துள்ளது. “எங்கள் நாட்டின் விடுதலைக்காக அமெரிக்கா வருவதாக நினைத்தோம், ஆனால் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியை விடுவிக்கப் போராடுகிறீர்கள்” என ஈரான் கிண்டலாகப் பதிவிட்டுள்ளது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது ஈரான் இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. சுமார் 4,000 கி.மீ தூரம் வரை பாயும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் இலக்கை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏவுகணை நடுவானில் செயலிழந்தது, மற்றொன்றை அமெரிக்கக் கப்பல் சுட்டு வீழ்த்தியது. பிரிட்டன் இந்தத் தாக்குதலை “பொறுப்பற்ற செயல்” என வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் கடற்படையை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் வான்படை மற்றும் கடற்படை பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறினாலும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் டிமோனா மற்றும் அரத் நகரங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் கடந்த 22 நாட்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது. ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்தப் போரின் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவது சர்வதேச நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.