தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? எனக்கு என் வேலை இருக்கிறது, அதை நான் செய்துகொண்டிருக்கிறேன்” எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.
திமுக கூட்டணியில் ம.நீ.ம தொடர்ந்து நீடிப்பது குறித்துப் பேசிய அவர், நாட்டின் நலன் கருதியே இந்தக் கூட்டணியில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணிக்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும், கட்சியில் புதியவர்களுக்கு எப்போதும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த கேள்விக்கு, தேர்தல் பணிகள் முடிந்த பிறகே அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அதில் தானும் நடிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தொகுதி குறித்த கேள்விகளுக்குத் தவிர்ப்பான பதிலளித்த அதேவேளையில், தனது அரசியல் மற்றும் சினிமா பயணங்கள் குறித்த தெளிவான தகவல்களை அவர் இந்தச் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.
