ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் ஆலோசகர் அலி லாரிஜானி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ரஷ்யா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் போன்ற ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குவது மற்றும் படுகொலை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது; இது எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என அதிபர் புதின் விளாசியுள்ளார். திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய ஆயுதமேந்திய தாக்குதல்கள், ஈரானில் ‘ஆட்சி மாற்றத்தை’ (Regime Change) கொண்டு வருவதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் போடும் சதி என ரஷ்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மறுபுறம், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனியை வரவேற்றுள்ள புதின், அவருக்கு ரஷ்யாவின் முழு ஆதரவு இருக்கும் என உறுதியளித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த போர்ச் சூழலைத் தணிக்க ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா சகரோவா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். போரை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தினாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்கள் உலக வர்த்தகத்தையும் அமைதியையும் சீர்குலைப்பதாக ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. புதின் தற்போது வளைகுடா நாட்டுத் தலைவர்களுடன் பேசி வருவதால், இந்தப் போரில் ரஷ்யாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் அதிகரித்துள்ளது.
