தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் (Booth Slip) இந்த முறை வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் அடையாளச் சான்றாகக் கருதப்பட்டு வந்த நிலையில், இனி அதற்குப் பதிலாக ‘வாக்காளர் தகவல் சீட்டு’ (Voter Information Slip) மட்டுமே வழங்கப்படும். இதில் வாக்காளர் பெயர், வரிசை எண் மற்றும் பாகம் எண் போன்ற விவரங்கள் மட்டுமே இருக்கும்; புகைப்படம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக முக்கியமாக, இந்த வாக்காளர் தகவல் சீட்டை (VIS) ஒரு அடையாள ஆவணமாகக் காண்பித்து வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வாக்காளர்கள் ஓட்டுப் போடச் செல்லும் போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (EPIC) அல்லது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்ற 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கண்டிப்பாகக் கொண்டு செல்ல வேண்டும். இந்த மாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருப்பதால், வாக்காளர்கள் குழப்பமடையாமல் இருக்க தேர்தல் ஆணையம் இந்தத் தகவலை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.
