தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (மார்ச் 19) கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாற்றுக் கட்சிகளுக்கு இணையாகத் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
கடந்த தேர்தல்களைப் போலவே விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை மையமாக வைத்து இந்தத் தேர்தல் அறிக்கையும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளுக்குப் போட்டியாக, சீமான் இம்முறை என்ன மாதிரியான அதிரடித் திட்டங்களை அறிவிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தித் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கை, அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
